Saturday, February 11, 2017

இயற்கை முறையில் சருமம் பராமரிக்கலாம்!

மிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெயில்காலம்தான் என்றாலும், நவம்பர் தொடங்கி பின் மார்ச் வரையில் சற்று குளிர்ச்சியான வானிலையும் நிலவுகிறது. இந்தக் காலகட்டத்தில், வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றால் சருமம் மிகவும் வறண்டு, சோர்ந்து, ஜீவனின்றி சுருக்கங்களுடன்  காணப்படும். இயற்கையின் பருவ மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் சருமத்தை இயற்கை தந்திருக்கும் கொடைகளை வைத்தே சரிசெய்ய முடியும். சருமத்தின் பொலிவைத் தக்க வைத்துக்கொள்ள ஈஸி டிப்ஸ்...

கற்றாழை (Aloe vera)

இளமையைத் தக்க வைக்கும் கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயரும் உண்டு. இதிலிருக்கும் ஆக்சின் (auxin), கிப்பெரெல்லின் (gibberellins) போன்ற ரசாயனங்கள், நம் உடலில் புதிய செல்களை உருவாக்க உதவும். இதன் சதைப் பகுதியை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால், சருமம் பொலிவாகும். இதில் இருக்கும் பீட்டாகரோட்டின், வைட்டமின் சி மற்றும் இ சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு சுருக்கங்களையும் நீக்கும். 

பப்பாளி பழச் சாறு

சிறந்த ‘ப்ளீச்சிங் ஏஜென்ட்’. ஏ, சி, இ உள்ளிட்ட பல வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தொடர்ந்து தடவி வருவதன் மூலம் சரும வெடிப்பு, இறந்த செல்கள் மற்றும் அழுக்கு நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

கசகசா


கசகசாவுடன் தண்ணீர் விட்டு அரைத்து அதன் பாலை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும செல்களைப் புதுப்பித்துப் புத்துணர்ச்சி தரும். மேலும், சரும கருமையையும் கருவளையத்தையும் நீக்குவதில் வல்லது. சிலருக்கு இது சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ரோஸ் வாட்டர்


பருத்தி அல்லது சுத்தமான துணியில், ரோஸ் வாட்டரை நனைத்து, சருமத்தின் மீது தேய்த்து வந்தால், குளிர் காற்றினால் ஏற்படும் வறண்ட சருமத்தையும் அதனால் ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய், தேன், ரோஸ் வாட்டர் மூன்றையும் தலா, இரண்டு டீ ஸ்பூன்கள் அளவுக்குக் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி வந்தால் வறண்ட சருமத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம். சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வது இதன் கூடுதல் சிறப்பு.

தேங்காய்


இளநீர், தேங்காய்ப் பால், எண்ணெய் என இதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே நம் அழகைப் பாதுகாப்பதில் அற்புதமானவைதான். தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் பளபளப்பாக மின்ன ஆரம்பித்துவிடும்.

வெந்நீர் வேண்டாம்


குளிர் காலத்தில் பலரும் கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளிப்பது வழக்கம். இது, சருமத்தை மேலும் பாதிக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. சருமத்தை வறண்டு போகச் செய்யும் சோப்புகளைத் தவிர்த்துவிட்டு, கடலைமாவு, பாசிப்பயறு மாவு, நலங்குமாவு போன்றவற்றைக் குளிக்கப் பயன்படுத்தலாம். 

Friday, February 10, 2017

வீட்டுக்குள்ளேயே பியூட்டி பார்லர் !

தலைமுடியைக் கவனிப்போமா!
தலை குளிப்பதாக இருந்தால், அன்றாடம் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தும் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி (தலைமுடிக்கு தேவையான அளவு), லேசாக சூடுபடுத்தி ஆற வைக்கவும். காட்டனில் சிறிதாக உருண்டை செய்துகொள்ளவும். தலைமுடியை நேர்வகிடு எடுத்து, ஒரு பகுதியை முடிந்து வைத்து, மற்றொரு பகுதியை 6 அல்லது 8 பங்குகளாக பிரித்து, முடியின் அடர்த்திக்கேற்ப, காட்டன் உருண்டையால் அந்த எண்ணெயைத் தோய்த்து தடவவும். மண்டையோட்டிலிருந்து ஆரம்பித்து, நீளவாக்கில் ஒவ்வொரு பாகமாக இப்படி எண்ணெயைத் தடவவும். கடைசியில், உள்ளங்கையில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொத்தக் கூந்தலையும் சேர்த்து வருடிவிடவும். இவ்வாறு ஏழு முறை வருடவும். பிறகு, விரல்நுனிகளைப் பயன்படுத்தி, மண்டையோட்டில் முடிந்த அளவுக்கு மசாஜ் செய்யவும். பெரிய பற்கள் உள்ள சீப்பைக் கொண்டு நன்கு அழுந்த வாரவும். சுமார் 25 முறை வாருவது நல்லது.

இதையெல்லாம் செய்து முடித்ததும், இந்தப் பகுதி முடியைக் கட்டி வைத்துவிட்டு, மற்றொரு பகுதி முடியையும் முந்தைய பகுதி முடிக்கு செய்தது போல செய்யவும். இப்படி செய்யும்போது... பலவீனமான முடி, பிளவுபட்ட முடியெல்லாம் கொட்டிவிடும்.
20 நிமிடம் கழித்து முட்டை கலந்த ஷாம்பு உபயோகித்து, இரு தடவை நன்கு அலசவும். பிறகு, நல்ல கண்டிஷனர் உபயோகிக்கவும். நிறைவாக காட்டன் துணியால் தலையை நன்கு துவட்டி, நீளவாக்கில் நீவிவிடவும். ஓரளவு உலர்ந்த பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் 15 முறை வாரிவிடவும். இப்படி வாரம் ஒரு தடவை என 4 வாரம் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
இந்த ஆயில் மசாஜ் மற்றும் ஹேர் வாஷ்... எல்லா வகை முடிக்கும், எல்லா பிரச்னைகளுக்கும் ஏற்றது என்பதோடு, எளிமையானதும்கூட. செலவு குறைவாகவே இருப்பதோடு, நேரமும் குறைவாகவே தேவைப்படும். இந்த ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளும்போது, சாதாரண தேங்காய் எண்ணெய் மற்றும் புரோட்டீன் ஷாம்பு போன்றவற்றைத்தான் உபயோகிக்க வேண்டும்.
மிகமிக அடிப்படையான இந்த சிகிச்சை, சிறப்பான சிகிச்சை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்! இதைச் செய்ய ஆரம்பித்த பிறகு, வேறு யுக்திகளை இதனுடன் கலக்கக் கூடாது. ஆளாளுக்கு ஏதாவது டிப்ஸ் தருவார்கள். உதாரணமாக... எலுமிச்சைச் சாறு கலந்தால் பளபளப்பாகும் என்பார்கள். அதை, இதனுடன் சேர்த்துச் செய்யக் கூடாது. ஒவ்வொருவருடைய முடியும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், இன்னொருவருக்கு கைகொடுத்த அதே வைத்தியத்தை, மற்றவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. எலுமிச்சை, தயிர், வெந்தயம் என்று சிலர் டிப்ஸ் தரும்போது, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு சைனஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால்... ஆபத்தாகிவிடும்.
ப்ளீச் மற்றும் ஃபேஷியல்  (Bleach and facial) !  
தினமும் குளிப்பதற்கு முன்பாக ஏடுடன் கூடிய பால் ஒரு குழி கரண்டி, எலுமிச்சைச் சாறு மூன்று சொட்டுகள் எடுத்துக் கொண்டு நன்கு குழைத்து, முதலில் முகம், காதின் ஓரங்கள், தோள்பட்டையில் ஆரம்பித்து கைகள், கைகளின் பின் முட்டி, கழுத்து, முதுகில் கைகள் எட்டும் வரை...  என அனைத்துப் பகுதிகளிலும் மசாஜ் செய்யுங்கள். சரியாக 10 நிமிடம் கழித்து நைஸாக அரைக்கப்பட்ட பச்சரிசி மாவு, தண்ணீர் கலந்து முகம், கழுத்து, முதுகு, கைகள், அக்குள் பகுதி, முழங்கை, கைமுட்டி என்று அனைத்து பகுதிக்கும் லேசான மசாஜ் செய்யவும். பார்லரில் செய்யப்படும் 'ஸ்க்ரப்' (Scrub) சிகிச்சைக்கு இணையானது இது.
அடுத்ததாக, சிறு கிண்ணத்தில் நீரை கொதிக்கவிட்டு, நீராவி பிடிக்க வேண்டும். சுத்தமான டிஷ்யூ பேப்பர் கொண்டு ஒற்றியெடுத்து, முல்தானி மிட்டியுடன், ரோஸ் வாட்டர் () வெதுவெதுப்பான நீர்விட்டுக் குழைத்து, மசாஜ் செய்த இடங்களில் பூசவும். காய்ந்ததும், உடம்பின் எல்லா இடங்களிலும் தண்ணீர் படும்படியாக ஷவரில் நின்று, தேய்த்துத் குளிக்கவும். பிறகு, வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்பு ஒருமுறை, நீரில் குழைத்த கடலைமாவு ஒருமுறை என போட்டுக் குளித்து... சுத்தமான டவலில் ஒற்றியெடுக்க, அன்று முழுக்க நீங்கள் தேவதைதான். முகத்தில் மற்றும் முதுகில், வெயிலில் அலைவதால் ஏற்பட்ட கருந்திட்டுகள், பருக்கள், பருவடுக்கள் அனைத்தும் போயே போச்! இதன் பிறகு, எந்த வகையான மேக்கப் போட்டாலும், அழகாகப் பொருந்தும். துளிகூட பக்கவிளைவுகள் இருக்காது.
வளைக்கரங்களை    வழுவழுப்பாக்குவோமா!
கைகளை வழுவழுப்பாக்கி, காண்போரை கவர வைக்கும் வித்தை... 'மெனிக்யூர்' (Manicure). இதை, வீட்டிலேயே செய்து கொள்வதற்கு தேவையான பொருட்கள்... வட்டமான பிளாஸ்டிக் டப் - 2, சிறிய டவல், கல் உப்பு - சிறிதளவு, 'நெயில் பைலர் (filer), எலுமிச்சைச் சாறு - 6 சொட்டு, சிறிய பிரஷ் - 1, ஷாம்பு - சிறிதளவு, ஆலிவ் ஆயில் - சிறிதளவு.
செய்முறை: நெயில் பாலிஷை முதலில் நீக்கவும். ஆலிவ் ஆயிலை கைகளில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்யவும். ஒரு கையின் ஒவ்வொரு விரலையும், மற்றொரு கையால் நன்கு நீவிவிடவும். நகங்கள், நக ஓரங்களில் பட்ஸ் வைத்து நன்கு தேய்க்கவும். பிறகு, முதல் டப்பில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு, எலுமிச்சைச் சாறு, ஷாம்பு போட்டு நன்கு நுரைக்கும்படியாகக் கலக்கவும். அந்த நுரையில் இரு கைகளையும் நனைத்து, சிறிய பிரஷ் கொண்டு தேய்க்கவும். நக ஓரங்களையும் நன்கு கழுவவும். அடுத்த டப்பில் அதேமாதிரி வெதுவெதுப்பான சுத்தமான நீரில் கைகளைக் கழுவி, டவலில் ஒற்றி எடுத்தால்... நீங்களே அந்த வித்தியாசத்தைக் கண்கூடாக உணர்வீர்கள். வாரம் ஒரு தடவை இதைச் செய்து வந்தால், வாழ்க்கை முழுக்க பளபளாதான்!
முக்கிய குறிப்பு: கைகளில் ரோமங்கள் இருந்தால், இந்த சிகிச்சைக்கு முன்பாக நீக்கிவிடவும்.
மெட்டிக் கால்களுக்கு மெருகு சேர்க்கலாம் வாங்க!
கால்களுக்கு மெருகூட்டுவது பெடிக்யூர் (Pedicure). இதை வீட்டிலேயே செய்வது எப்படி?
'மெனிக்யூர்' செய்வதற்கு தேவைப்படும் பொருட்களோடு, கூடுதலாக சாஃப்ட் டைப் மெட்டல் ஸ்கரப்பர் ஒன்று இதற்குத் தேவைப்படும். முதலில் கால்களைச் சுத்தமாக கழுவிவிட்டு, ஸீணீவீறீ யீவீறீமீக்ஷீ கொண்டு நகங்களை சீர்செய்து, ஆலிவ் ஆயில் கொண்டு முழங்கால்கள், விரல்கள், விரல் இடுக்குகள் என சற்று அழுத்தமாக மசாஜ் செய்யவும். குதிகால்களுக்கு கூடுதல் கவனம்... ப்ளஸ் கூடுதல் அழுத்தம் கொடுக்கவும். கையின் கட்டைவிரலை பாதத்திலும், மீதி நான்கு விரல்களை கால்களின் மேற்புறத்திலும் வைத்து சற்று அழுத்தி நீவிவிடவும். பத்து நிமிடம் மசாஜ் செய்தால் இதமாக இருக்கும்.
அடுத்ததாக முதல் டப்பில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு, ஷாம்பு, எலுமிச்சைச் சாறு போட்டு நுரை வர கலக்கி, கால்களை அதில் வைத்து பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவிவிட்டு, பிறகு சாஃப்ட் ஸ்க்ரப்பர் கொண்டு எல்லா பகுதியையும் நன்கு தேய்க்கவும் (காயம் ஏற்படும் அளவு தேய்க்கக் கூடாது). பிறகு, அடுத்த டப்பில் சுத்தமான வெதுவெதுப்பான நீரில் கழுவி டவலில் ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் கால்கள் அழகும், ஆரோக்கியமும் பெற்றுவிடும். மணமகனின் கரங்களால் மெட்டி அணிவிக்கும்போது... காண்போர் கண்களை கொள்ளை கொள்ள தயாராகிவிடும்.
அருந்ததி பார்க்கும் கண்களை...
அழகுபடுத்த வேண்டாமோ!
இரவில் படுக்கைக்கு செல்லும் முன், விளக்கெண்ணெயை விரல்களில் ஒரு ட்ராப் தொட்டு, மை இடுவது போல் கீழ் இமைகளிலும், லைனர் போடுவது போல் மேல் இமைகளிலும் இட்டுக் கொண்டு தூங்கலாம். அடுத்த நாள், ஆறு நிமிடம் கண்களுக்கு எக்ஸர்சைஸ் செய்யலாம். படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தோ... உட்கார்ந்த நிலையில் நேராக சுவரைப் பார்த்தோ... இதைச் செய்யலாம். பிறகு, இடமிருந்து வலமாக 5 முறை, வலமிருந்து இடமாக 5 முறை, மேல் இருந்து கீழ், கீழ் இருந்து மேல், கடிகாரச்சுற்று போல, கடிகாரச்சுற்றுக்கு நேரெதிர் சுற்றாக, சாய்வாக... இப்படி கண்களை சுழற்றி ஐந்து ஐந்து தடவை பயிற்சி செய்யவும். பிறகு, 30 செகண்டுகள் வேகமாகவும்... பிறகு, 30 செகண்டுகள் மெதுவாகவும் கண்களைச் சிமிட்டவும். இதை அடிக்கடி செய்து வர கண்கள் அழகு பெறும்.
அழகுக் கண்களால் மொழி பேசினாலும்... வாய் மொழி பேசாமல் இருக்க முடியுமா? மணமகளின் உதட்டை அழகு படுத்த... விளக்கெண்ணெய், வெண்ணெய், பீட்ரூட் தோல் இவற்றை வைத்து லேசாக மசாஜ் செய்யவும். கொய்யா இலை அல்லது எலுமிச்சை இலையை சுடுநீரில் போட்டு, சற்று நேரத்துக்குப் பிறகு, அந்த நீரால் வாய் கொப்பளிக்க புத்துணர்ச்சி பெறலாம்.
மேற்சொன்ன விஷயங்களை, தவறாமல் கடைபிடித்தால்... திருமணம் முடிந்த பிறகும், ஆரோக்கியம் உங்களிடமே ஒட்டிக் கொண்டிருக்கும்!